பிரதிபலிப்பு
சமூகம் என் பார்வையில் ...
Saturday, 23 September 2017
Thursday, 22 October 2015
மரணம் - வரும் நேரம் தெரியாது
"என் இறப்பிற்குப் பின் என்னோடு எனக்கு சம்மந்தமில்லை"
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பாதையில் போகின்றோம். ஒவ்வொரு கடவுளை, மதத்தை பின்பற்றுகின்றோம். நாம் வெவ்வேறு வழிகளில் பயணித்தாலும், பயணத்தின் கடைசியில் நாம் அனைவரும் செல்லுகின்ற இடம் ஒன்றுதான், அதுதான் மரணம். இதை யாராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. இந்த நூற்றாண்டின் கவிஞன் கண்ணதாசன் இப்படி கூறுகிறார்.
" வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ"
ஒரு மனிதன் இறந்த பின் அவனது இறுதி பயணத்தில் உடன் வருவது யார்? என்ற கேள்விக்கு இந்த பாடல் பதில் அளிக்க முயல்கிறது இவ்வரிகள்.
சேர்த்துக் குவித்துள்ள செல்வமா? - அது வீட்டோடு தங்கிவிடும்.
மனைவியா? - வீதி வரை துணை வருவாள்.
மகனா? - சுடுகாடு வரை வருவான்.
கட்டிய கட்டடமா? - அது அசைவதில்லை.
பெற்ற பட்டங்களா? - நீ இறந்தபின் ஒன்றுக்கும் உதவாது.
பின் யார்தான் கடைசிவரை துணை வருவார்? நீங்கள் செய்த நல்வினை தீவினைகளே என்று கடைசியில் முடிகிறது இப்பாடல் வரிகள்.
"காதற்ற ஊசியும் வாராது, காண் கடை வழிக்கே" - என்கிறார் ஒரு அறிஞர். இதன் கருத்து என்னவென்றால், மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கடைசியில் பயனில்லாத, காதற்ற ஊசியைப் போல, கையில் எதையும் கொண்டு செல்ல முடியாது. இன்று நீங்கள் சம்பாதித்த சொத்துகளாக நினைப்பவை எல்லாம் உங்களோடு கூட வரப்போவதில்லை. ஆடி அடங்கப் போகும் இந்த வாழ்க்கையில் ஒருவர் வாழ்ந்த வாழ்வின் சிறப்பு அவருடைய மரணத்தின் போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில் ஒருவர் இறந்தபிறகுதான் மனிதர்கள் அவரைப் பற்றிய மதிப்பீடுகளை மதிப்பீடு செய்கிறார்கள்.
காலையில்
வீட்டைவிட்டு கிளம்புகிற நீங்க, உயிரோடு திரும்பி வந்தால் உங்க பேரை சொல்லி, So and So வந்திருக்கிறாங்க என்று சொல்வார்கள். இதே காலையில போற நீங்க, லாரியில அடிபட்டு, செத்து கூளமாக வாரிட்டு வந்து, கட்டு கட்டி மார்ச்சுவரி வேன்ல
வந்தா, என்ன
சொல்வாங்க. மொத்தமா சேர்த்து ஒரே பேருதான் Body வந்துருச்சா? இல்லன்னா Body எப்ப வரும்? ஆமாங்க, நீங்க உயிருக்கு உயிரா நேசிக்கிறவங்க கூட உங்க உடம்புல உயிர் இல்லன்னா, Body- ன்னுதான் சொல்வான்க. இந்த உயிரை காப்பாத்துறதுக்குதான் நீங்களும் நானும் போராடுகிறோம்.
![]() |
| Body without soul is just an empty shell. Soul is giving you life. |
நீங்க எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும், எவ்வளவு பெரிய பட்டங்கள் பெற்றிருந்தாலும், எத்தனை உயர்ந்த சாதனையாளர் விருது பெற்றிருந்தாலும், இருக்கிற அத்தனை திறமையும் உங்களிடம் இருந்தாலும், உங்க குடும்பம் எவ்வளவு பெரிய பணக்கார குடும்பமாய் இருந்தாலும் போன உயிர் போனதுதான், அதை திரும்ப கொண்டு வர முடியாது. இதுதாங்க உண்மை. அதை நினைக்கவே நம்ம மனசு தயங்கும். ஏன்னா? உண்மை எப்போதுமே நமக்கு கசக்கும் என்பதால் நாம் அதை சீண்டுவது கூட கிடையாது. செய்யுற எல்லா வேலைக்கும் Time Table போட்டு, Schedule போடுற நமக்கு, நம்ம மரணத்தோட நேரம் தெரிஞ்சா , கொஞ்சம் எப்படி இருப்போம்னு யோசிச்சு பாருங்க.
எங்கேயாவது சுற்றுலா போனா, ரெண்டு நாள் கழிச்சு, நமது சொந்த ஊருக்கு திரும்பி வர மனம் வராது. அதுக்காக நீங்களும் நானும் அங்கேயே தங்கி விடுறதும் கிடையாது. அதே போலத்தான் மேலிருந்து சுற்றுலாவாக கீழே சுற்றிப் பார்க்க வந்த நாம், மேலே செல்ல வேண்டிய நேரம் வரும்போது, இந்த பூமி எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு, எனக்கு தேவையான எல்லா வசதியும் இங்கே இருக்கு, நான் இங்கேயே இருந்துடறேன் என சொல்ல முடியாது. நீங்களும் நானும் விரும்புறோமோ, விரும்பலையோ, வாழ்ந்தோமோ, வாழலையோ கண்டிப்பாக ஒருநாள் மரணம் வந்தே தீரும். இது திண்ணம். இதை உங்களை படைத்த கடவுளாலே கூட மாற்ற முடியாது.
நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, எந்த கவலையும் இன்றி நன்றாக வாழ்ந்தேன்,என் ஓட்டத்தை முடித்துக்கொண்டேன், பரிசு பெற வேண்டிய இடத்திற்கு வந்து விட்டேன் என்ற இலட்சியத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, மேலான இலட்சியத்திற்காக வாழுங்கள். அந்த உயர்ந்த இலட்சியம் உங்களை உன்னதரின் பாதம் சேர்த்திடும். சாவுக்கு பயப்பட வேண்டாம், எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள். கவனமாய் இருங்கள். ஏனெனில் திருடன் எப்போது வருவான் என்று வீட்டுத் தலைவருக்கு தெரிந்திருந்தால் அவர் விழிப்போடு இருப்பார். நாமும் மரணம் எப்போது வரும் என அறியோம்.
நான் நெடுநாள் வாழப்போகிறேன் என பலர் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பர், நிலையற்ற வாழ்வை நினைத்து பார்க்காமல். இன்னும் நிறைய நாள் வாழவேண்டும், சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளையோர் அடுத்த நொடியே இறக்கலாம். இதோ இறக்கப்போகிறார் என நாம் நினைக்கும் முதியவர் இன்னும் பல வருடங்கள் வாழலாம்.எனவே எப்போது மரணம் வந்தாலும்,எதிர்கொள்ள தயாராய் இருக்கும் மனிதர் எப்போதும் விழிப்பாய் இருக்கிறார்.ஏனெனில் எந்த நேரத்தில் எது நடக்கும் என்று தெரிந்து வைத்திருக்க நமக்கு நேரமில்லை. எல்லாம் கடந்து போகும் என்ற மனநிலை நம்மில் இருந்தால் மரணம் கூட ஒரு கடத்தலே.
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும், அதனைக் கொண்டு பெருமிதம் அடைவதிலும் நேரத்தை செலவிடும் நானும் நீங்களும், ஏனோ இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்ற, தற்காலிக வாழ்வு என்பதை மறந்து இஸ்டத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாவு ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். நேற்று உங்களோடு இருந்தவர்கள் இன்று உங்களோடு மட்டுமல்ல, இந்த உலகிலே இல்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. அதை தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ எந்த மாமனிதனாலும் இயலாது.
நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது, ஒரு சோதனை என்பதை உணர்ந்து, அழியக் கூடிய பொருட்களின் மீது, பேராசை கொள்வதை விட்டுவிட்டு, நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக, அதிகம் அதிகம் நற்காரியங்களை செய்வோமாக. நாளை உங்களது மரணம் உங்களை வந்தடைந்து விடலாம். அதற்குள் யார் யாரையெல்லாம் மன்னிக்க வேண்டுமோ அவர்களை மன்னித்து மகிழ்ச்சியோடு வாழ்கையை வாழ்ந்தால், நாளைய உலகம் உங்களை போற்றும்.
Saturday, 5 September 2015
என் ஆசானே ! உம்மை என் நெஞ்சம்
மறப்பதில்லை
நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ ஆசிரியர்களிடம் நாம் பாடம் கற்று
கொண்டிருக்கிறோம். ஆனால் ஏனோ நமது மனம் எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. ஆனால் ஒரு
சிலரை மட்டும் நாம் மறப்பதில்லை. அப்படி எனது வாழ்விலும், புது விதமான சமூக கண்ணோட்டத்தை விதைத்த என் ஆசானைப் பற்றி
பகிர்வதில் பெருமிதமடைகிறேன். பல நல்ல வாழ்க்கை பாடங்களை உங்களுக்கு இலவசமாய் வழங்கிய உங்கள்
ஆசிரியர்களை முடிந்தவர்கள் தேடிச்சென்று வாழ்த்துவோம். ஏனெனில் ஒரு நல்ல ஆசிரியர் தன்னோட பணியை, வாழ்வாதாரத்திற்கான வேலையாக என்றைக்குமே பார்ப்பதில்லை, மாறாக... அதை ஒரு
சேவை ரீதியான பணி
உயிரோட்டமான பணி
ஆய்வு சம்மதப்பட்ட பணி
உளவியல் ரீதியான பணி
என்றுதான் பார்க்கின்றனர்.
ஆசிரியர்கள் மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி
பெற்றவர்கள். ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது, ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர்
சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே
தீர்மானிக்கிறது. ஒரு நல்லாசிரியர் பல நல்ல மாணவர்களை உருவாக்கி நாட்டின் பெருமையை
உயர்த்துகிறார். நல்ல ஆசிரியரின் பணிக்கு எல்லையே கிடையாது. தன்னிடம் வேலை செய்யும் ஒருவன்
முதலாளி ஆவதை ஒருவனும் விரும்பமாட்டான். ஆனால், தன்னிடம் கற்கும் மாணவன் சிறந்த
அறிஞனாக ஆவதைக் காணும் ஆசிரியப் பெருமக்கள் பெருமகிழ்ச்சியுறுவர்.
ஒரு விளக்கு இருந்தால் போதும், அதைப் பயன்படுத்தி பல விளக்குகளை
ஏற்றலாம். இத்தகைய ஒரு எல்லையில்லா சேவையை நானும் என் ஆசிரியரிடம் கண்டேன், அதை நினைத்து பார்த்து வியக்கின்றேன். நான் ஒவ்வொரு முறையும்
விடுமுறைக்கு செல்லும்போது என்னோடு கூட படித்த தோழிகளின் இல்லங்களுக்கு சென்று
வரும் வழக்கமுண்டு .அப்படிச் செல்லும்போது, எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிடைக்காத எங்களின் பள்ளிகால அனுபவங்களை
நினைத்து பார்த்து மகிழ்வோம். அவ்வேளைகளில் நாங்கள் எங்கள் ஆசிரியர் ஒருவரை பற்றி பேச
என்றும் மறப்பதில்லை.
ஓர் ஆசிரியர் தன்னிடம் கல்வி
பயின்ற மாணவரை மறந்து விடலாம். ஆனால், ஒரு மாணவர் தான் கல்வி பயின்ற
ஆசிரியரை என்றும் மறக்க மாட்டார். அதுவே நல்ல மாணவருக்கு அடையாளம். என்னுடைய
ஆசானிடம் நான் மேற்கூறிய நல்ல ஆசிரியற்குரிய எல்லா வாழ்வியல் செயல்பாடுகளையும்
அதிகமாகவே பார்த்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள
ஆசைப்படுகிறேன்.
புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடிக்கு அருகில் மாங்கோட்டை, ஒரு மிகப்பெரிய கிராமம், விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள். அங்கு ஒரு அரசு
நடுநிலைப்பள்ளி, எங்கள் ஊரில் பள்ளிக்கூட வசதி
இல்லாததால் நான் அங்கு சேர்க்கப்பட்டேன். நான் அங்கு 6-ம் வகுப்பு முடித்து 7-ம்
வகுப்பு செல்லும் தருணம். அவ்வூரில் 5,6 வகுப்பைச் சார்ந்த மக்கள்
வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் அங்கு ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு சில
வகுப்பினரால் கருதப்பட்ட, சகோதர சகோகதரிகளும் ஊரின் ஒரு
மூலையில் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் ஒரே பள்ளியில் படிக்கும் சூழல் இருந்த
போதிலும், ஒரு சில குழந்தைகள் அவர்களோடு
பேசுவதை தவிர்த்த நிலைமை காணப்பட்டது.
இருப்பினும் அழுக்குச்
சட்டைகளோடும், எண்ணெய் தேய்க்காத பரட்டை
தலைகளோடும், கிழிந்த சட்டைகளோடும், மூக்கு ஒழுகும் முகங்களோடும் மாணவ மாணவிகள் ஊரின் எல்லா பகுதிகளிலிருந்தும்
பள்ளிக்கு வருவார்கள். அவர்களையும் நாம் குறைபட்டு கொள்ள முடியாது. அங்குள்ள பல
குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை அவ்வாறு இருந்தது. பள்ளி நிர்வாகமும் சுத்தத்தை
பற்றி சொன்னது, சில வேளைகளில் கண்டித்தது. ஆனால்
முழு மாற்றம் எங்கள் வகுப்பில் தொடங்கியது. மாற்றத்திற்கு காரணம் எங்கள் வகுப்பாசிரியர் திரு. செல்வம் அவர்கள்.
எல்லா வகுப்புகளை போலவே
எங்களுக்கும் வகுப்புகள் ஆரம்பமாயின. எல்லா வகுப்புகளையும் விட எங்கள் வகுப்பு
மாணவர்கள் ஒரு சில வாரங்களில் எங்கள் வகுப்பு மாறுபட்ட, நல்ல புதிய சிந்தனைகளுக்கு மாற்றப்பட்டோம். இந்த வகுப்பில் என் வாழ்க்கைக்கான அஸ்திவாரம்
விதைக்கப்பட்டதை நான் இப்போது உணர்கின்றேன்.
மாற்றம் நிகழும் வரை, எங்கள் வகுப்பிலும் பலர் நான்
மேற்கூறியவாறுதான் பள்ளிக்கு வந்தார்கள். எங்கள் ஆசிரியர் திரு.செல்வம் அவர்கள்
மிகவும் கண்டிப்பானவர்கள். ஒருநாள் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் எண்ணெய் தேய்க்காத, ரிப்பன் வைத்து தலை கட்டாத என் தோழிகளை எழுந்து நிற்க சொன்னதும், பயந்துகொண்டே அவர்களும் எழுந்து நின்றார்கள். ஒரு மாணவியை
அழைத்து, தனது பையிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்தார். ஒரு டப்பாவில் தேங்காய் எண்ணெய், சீப்பு , கண்ணாடி, பவுடர் இருந்தது. எனது தோழிகளை
அழைத்து, எண்ணெய் தேய்க்காத, தலை சீவாத என் தோழிகளுக்கு எண்ணெய் தேய்த்து தலை சீவி விடச்
சொன்னார். அதை நினைத்து பார்க்கும்போது இப்போதும் நான் வியக்கின்றேன். ஏனெனில்
நானும் ஒருநாள் அந்த வகுப்பில் பவுடர் போட்டுக்கொண்ட ஞாபகம் இப்போது நினைவுக்கு
வருகின்றது.
தினமும் அவ்வாறு வரும் எனது
தோழிகளின், தோழர்களின் எண்ணிக்கை குறைந்தது, எண்ணெயும், பவுடரும் காலியானது, எங்களின் மனதைப்போல் உடைகளும் சுத்தமானது, எங்கள் நகங்கள் அடிக்கடி சுத்தமாக இருந்தன. எங்கள் எழுதுகோல்கள் மையினை
கொட்டவில்லை, நாங்கள் ஒவ்வொருவரும் தோழமை
உணர்வோடு பழக ஆரம்பித்தோம். எந்த பேதமும் பார்க்காத எங்கள் ஆசான் எங்களுக்கு
புத்தக அறிவோடு, பொது அறிவையும், சமுதாயத்தை பற்றிய அறிவையும் வழங்கினார். மீண்டும் புதிய
திட்டமாக, தின்பண்டங்களில் வீணடிக்கும் சிறு தொகையை சேர்க்க சிறுசேமிப்பு
திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
ஏற்றத்தாழ்வுகளால் நிறைந்திருந்த
எங்கள் பெற்றோர்களின் மனமும் எங்கள் ஆசிரியரை விரும்ப ஆரம்பித்தது. தொடக்கத்தில்
நாங்கள் கண்டிப்பு மிக்கவர் என நினைத்த எங்கள் ஆசிரியர் எங்களுக்கு மட்டுமல்ல
எல்லா மாணவர்களுக்கும் தோழரானார். போட்டிகள் பல நடத்தினார். வெற்றி பெற்றோருக்கு
மட்டுமல்ல பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கினார். இத்தனை செயல்களையும் அவர்
செய்தபோது அவருடைய வயது 25 முதல் 30 க்குள் இருந்திருக்கும்.
15 வருடங்களுக்கு பிறகு, கடந்த மே மாதம் என் ஆசான் ஐயா
செல்வம் அவர்களை அவருடைய குடும்பத்தினரோடு சந்திக்கும் மாபெரும் வாய்ப்பை பெற்றதை
நினைத்து மகிழ்கின்றேன். இன்னும் எனது வகுப்பு தோழிகள் பலர் அவரோடு
தொடர்பில் இருக்கின்றோம். நாங்கள் இன்று பல நல்ல நிலைகளில் இருப்பதற்கு எங்கள் ஐயா
திரு. செல்வம் அவர்கள் மிக முக்கிய காரணம்.
எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா
!
உங்கள்
சேவைக்கு
நீங்கள்
தந்த கல்விக்கு
நன்றி
சொல்வது மட்டும் போதாது
நான் என்
ஆயுள் முழுவதும்
உங்களுக்கு
கடமை பட்டுள்ளேன்
உங்கள் சேவையை என்றும்
மறக்க
மாட்டேன் !
நன்றியுடன்
உங்களை
நினைத்துப்
பார்க்கும்
உங்கள் சேவை இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்தும்
உங்கள்
அன்பு மாணவி
Friday, 28 August 2015
Monday, 24 August 2015
Sunday, 23 August 2015
தினமும் விஷம்
அன்றைக்கு ஏழைகள் மட்டுமே புசித்த உணவு, இன்னைக்கு பணக்காரர்களின் உணவாய் மாறிப்போனதன் காரணம் என்னவோ? அதில் எனக்கொரு சந்தோசம், காரணம் எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த உணவு அது என்பதனால். அது என்னன்னு யோசிக்கிறின்களா???? வேற ஒண்ணுமில்லை நம்ம கிராமத்து மக்களின் உணவான கேழ்வரகுதான் .
நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த நாட்களில், எங்க வீட்ல அரிசி சோறுதான். ஆனா எங்க மாமா வீட்ல எப்பவுமே கேழ்வரகு கூழ் இருந்து கொண்டே இருக்கும். எங்க பாட்டி என்னை அழைத்து , முதுகு தேய்த்து விட சொல்லுவாங்க, நான் போக மறுப்பேன். அப்புறம் இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டோம். அதாவது நான் உங்களுக்கு முதுகு தேய்த்து விடுறேன், நீங்க எனக்கு கேழ்வரகுகூழ் தரணும்னு. கூழ் இருந்தா ஒரு நாளைக்கி ஐந்து வேளை கூட சாப்பிட்ட நாட்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன . இன்னைக்கும் நான் லீவுக்கு போனால் அம்மாட்ட கேட்கிற ஒரே உணவு கேழ்வரகுகூழ்.
இன்னக்கி எங்க
பார்த்தாலும் அதிவிரைவு உணவகம் அதிகமாக இருக்குங்க. கண்ணிமைக்கிற நொடில உணவு
தயாரிக்கப்படுது. நீங்க அதிவிரைவு உணவகதுல
வாங்குற உணவ கொஞ்சம் தாமதப்படுத்தி சாப்பிட்டு பாருங்களேன்.... அதுக்கப்புறம்
பட்டினியா கிடந்தாலும் பாஸ்ட் புட் சாப்பிடனும்னு ஆசையே
வராது. ஒரு பதினைந்து வருசத்துக்கு முன்னாடி 15,
17 வயதில்
பெண்கள் பூப்பெய்திய காலம் மாறி, இப்ப 5-வது படிக்கிற குழந்தைகள் பூப்பெய்தும் நிலை நீங்களும் நானும் அறியாததல்ல. காரணம் நம்ம எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் நாம
கண்டுகிறதில்லை. சிக்கன் பிரியாணி, சிக்கன்65, என்று நம்முடைய வீட்டு பெண்கள் வெளுத்துகட்டுவதால்.
இன்று
ஆண்களை விட அதிகமாவே, இந்த சிக்கன் பிரியாணியை பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், அது மிகவும் ஆபத்தானது
என்று அறிந்திருந்தும். பிராய்லர் கோழி 35 நாளில் விரைவாக
வளர்ச்சியடையுது. பிராய்லர்
கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் 'ரோக்ஸார்சோன்’
(Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லதாம்.
இதை அதிகமாக சாப்பிடுகிறதினால் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு ஏற்படுதுங்க. அதோடு இன்றைய உணவு
முறைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே நூற்றுக்கணக்கான
ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை புது புது பெயர்களில் நோய்களை ஏற்படுத்துகின்றன. பாருங்க நம்ம உடலை நாமதான் பார்த்துக்கனும். நோய் வர்றதுக்கு ஒரு மிகப்பெரிய காரணம் நம்முடைய உணவுமுறை , ஏன்னா கூட்டி கழிச்சு பார்த்தா நாம உழைக்கிறதே
இந்த ஒருசாண் வயித்துகாகதான் (நான் சொல்லல, இது நம்ம பெரியவங்க சொன்னது) மறந்துடாதீங்க, நல்லதை மட்டுமே சாப்பிடுங்க,அதை வீட்டுல செஞ்சு சாபிடுங்க. ஏதோ என்னால முடிஞ்சது.
ரொம்ப நன்றிங்க.
Sunday, 2 August 2015
பூமியில் விதைக்கப்பட்ட கலாமுக்கு சலாம்
நாம் பிறந்த போது, வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும், வானத்தை தொடும் அளவிற்கு வளரலாம் என்ற மாபெரும் உண்மைக்கு உருவம் கொடுத்து, இளம் உள்ளங்களை உசுப்பி சென்றிருப்பவர் திரு.கலாம் ஐயா அவர்கள். இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன் , வாழ்கையைப் பற்றிய புரிதல்களோடு சாதிக்கத்துடிக்கும் ஒவ்வொரு வேட்கை கொண்ட மனிதருக்கும், தன் வார்த்தைகளால், வாழ்வால் பாதை அமைத்து கொடுத்திருக்கிறார். அவரின் இறுதி ஊர்வலத்தில் எல்லோருடைய உள்ளங்களும் ஒரே உணர்வோடு, "மீண்டும் நீங்கள் திரும்பி வர மாட்டீரா?" என்ற குமுறலோடு இருந்தன.
எளிமை, உழைப்பு , இயற்கையின் மீது அளவற்ற அன்பு, விருந்தோம்பல், ஒடுக்கப்பட்டோருக்கு புதுவாழ்வு, கனவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி என்று அடுக்கி கொண்டே போகலாம் அவர் வாழ்ந்த மதிப்பீடுகளை. கடந்த வருடம் ஐயா அவர்கள்,
நான் பயின்ற சென்னை லயோலா கல்லூரிக்கு வந்திருந்தபோது, தூரத்தில் அமர்ந்து, அவரின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்கின்றேன்.
நாம் அனைவரும் இந்தியத் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்பதனை எண்பித்தவர் கலாம் அவர்கள். தன் வாழ்விலே ஒரு கட்டத்துக்குப் பின் எல்லாம் இருந்தும், எதையும் தன் சொந்த தேவைக்காக பயன்படுத்தாதவர். இத்தகைய மாமனிதர் வாழ்ந்த தேசத்திலே நான் பிறந்தேன் என்பதை விட, அவர் வாழ்ந்த நாட்களிலே வாழ்கிறேன் என்பதில் என் மனம் பெருமை கொள்கிறது.
இஸ்லாம் மதத்திலே ஒரு முறை உண்டு. ஒரு ஆண்மகனுக்கு எவ்வளவு பொருளாதாரம் (சொத்து) உள்ளதோ , அதற்கேற்ப திருமணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் கலாம் அவர்கள் ஒரு துறவியாக வாழ்ந்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த மாபெரும் உண்மை. கலாம் ஐயா அவர்களின் கனவுகள் மெய்யானதாய் ஆகிட உறுதி ஏற்ப்போம்.
கலாம் தாத்தா உங்களுக்கு என் சலாம்
Subscribe to:
Posts (Atom)


