Sunday, 23 August 2015

தினமும் விஷம்         

      இன்னக்கி  நாம வாழ்ற இந்த அறிவியல் யுகத்துல, ஒரு பக்கம் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகள் கொட்டிகிடக்கு. அதற்கு நேரெதிறாய், எங்க எதில எப்ப பார்த்தாலும் கலப்படம். கலப்படம் இல்லாத பொருளை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு நிலை தலைகீழாய் மாறிடுச்சு. நம் கிச்சனில் இருக்கும் மளிகைப் பொருட்களில், 50 சதவிகிதத்துக்கும் மேல் கலப்படம் சேர்ந்த பொருட்களே.              நாம காலையில பல் தேய்க்க பயன்படுத்துற பல்பொடி முதல் இரவு தூங்க போறதுக்கு முன்னாடி குடிக்கிற பால் வரை, ஏன் நாம் தூங்குகின்ற பாய் வரை அனைத்துமே கலப்படமாய்த்தான் காணப்படுகிறது. பல வேளைகளில் நாம் உண்பது என்னவென்று அறியாமலே  ருசியாக இருக்கிறதென்று நாமும் சாப்பிடுகிறோம்.

   அன்றைக்கு ஏழைகள் மட்டுமே புசித்த உணவு, இன்னைக்கு பணக்காரர்களின் உணவாய் மாறிப்போனதன் காரணம் என்னவோ? அதில் எனக்கொரு சந்தோசம், காரணம் எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த உணவு அது என்பதனால். அது என்னன்னு யோசிக்கிறின்களா???? வேற ஒண்ணுமில்லை நம்ம கிராமத்து மக்களின் உணவான கேழ்வரகுதான் . 

          நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த  நாட்களில், எங்க வீட்ல  அரிசி சோறுதான். ஆனா எங்க மாமா வீட்ல எப்பவுமே கேழ்வரகு கூழ்  இருந்து கொண்டே இருக்கும். எங்க பாட்டி என்னை அழைத்து , முதுகு தேய்த்து விட சொல்லுவாங்க, நான் போக மறுப்பேன். அப்புறம் இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டோம். அதாவது நான் உங்களுக்கு முதுகு தேய்த்து விடுறேன், நீங்க எனக்கு கேழ்வரகுகூழ் தரணும்னு. கூழ் இருந்தா ஒரு நாளைக்கி ஐந்து வேளை கூட  சாப்பிட்ட நாட்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன . இன்னைக்கும் நான் லீவுக்கு போனால் அம்மாட்ட கேட்கிற ஒரே உணவு கேழ்வரகுகூழ். 

   
  இன்னக்கி எங்க பார்த்தாலும் அதிவிரைவு உணவகம் அதிகமாக இருக்குங்க. கண்ணிமைக்கிற நொடில உணவு தயாரிக்கப்படுது. நீங்க அதிவிரைவு உணவகதுல வாங்குற உணவ கொஞ்சம் தாமதப்படுத்தி சாப்பிட்டு பாருங்களேன்.... அதுக்கப்புறம் பட்டினியா கிடந்தாலும் பாஸ்ட் புட்  சாப்பிடனும்னு ஆசையே வராது. ஒரு பதினைந்து  வருசத்துக்கு முன்னாடி  15, 17 வயதில் பெண்கள் பூப்பெய்திய   காலம் மாறி, இப்ப 5-வது படிக்கிற குழந்தைகள் பூப்பெய்தும் நிலை நீங்களும் நானும் அறியாததல்ல. காரணம் நம்ம எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் நாம கண்டுகிறதில்லை. சிக்கன் பிரியாணி, சிக்கன்65, என்று நம்முடைய வீட்டு பெண்கள் வெளுத்துகட்டுவதால்.

                 இன்று ஆண்களை விட அதிகமாவே, இந்த சிக்கன் பிரியாணியை பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள், அது மிகவும் ஆபத்தானது என்று அறிந்திருந்தும். பிராய்லர் கோழி 35 நாளில் விரைவாக வளர்ச்சியடையுது. பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லதாம்


         இதை அதிகமாக சாப்பிடுகிறதினால் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு ஏற்படுதுங்க. அதோடு இன்றைய உணவு முறைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே நூற்றுக்கணக்கான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை புது புது பெயர்களில் நோய்களை ஏற்படுத்துகின்றன. பாருங்க நம்ம உடலை நாமதான் பார்த்துக்கனும். நோய் வர்றதுக்கு ஒரு மிகப்பெரிய காரணம் நம்முடைய உணவுமுறை , ஏன்னா கூட்டி கழிச்சு பார்த்தா நாம உழைக்கிறதே இந்த ஒருசாண் வயித்துகாகதான் (நான் சொல்லல, இது நம்ம பெரியவங்க சொன்னது) மறந்துடாதீங்க, நல்லதை மட்டுமே சாப்பிடுங்க,அதை வீட்டுல செஞ்சு சாபிடுங்க. ஏதோ என்னால முடிஞ்சது. 


ரொம்ப நன்றிங்க.   

Sunday, 2 August 2015

பூமியில் விதைக்கப்பட்ட கலாமுக்கு சலாம்

         நாம் பிறந்த போது, வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும், வானத்தை தொடும் அளவிற்கு வளரலாம் என்ற மாபெரும் உண்மைக்கு உருவம் கொடுத்து, இளம் உள்ளங்களை உசுப்பி சென்றிருப்பவர்  திரு.கலாம் ஐயா அவர்கள்.  இன்றைய இளைஞர்களின் கனவு நாயகன் , வாழ்கையைப்  பற்றிய புரிதல்களோடு சாதிக்கத்துடிக்கும்  ஒவ்வொரு வேட்கை கொண்ட மனிதருக்கும்,  தன் வார்த்தைகளால், வாழ்வால் பாதை அமைத்து கொடுத்திருக்கிறார். அவரின் இறுதி ஊர்வலத்தில் எல்லோருடைய உள்ளங்களும் ஒரே உணர்வோடு, "மீண்டும் நீங்கள் திரும்பி வர மாட்டீரா?" என்ற குமுறலோடு இருந்தன. 

      எளிமை, உழைப்பு , இயற்கையின் மீது அளவற்ற அன்பு, விருந்தோம்பல், ஒடுக்கப்பட்டோருக்கு புதுவாழ்வு, கனவுகளை மட்டுமே சுமந்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி என்று அடுக்கி கொண்டே போகலாம் அவர்  வாழ்ந்த மதிப்பீடுகளை.  கடந்த வருடம் ஐயா அவர்கள்,
நான் பயின்ற சென்னை லயோலா கல்லூரிக்கு வந்திருந்தபோது, தூரத்தில் அமர்ந்து, அவரின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு  கிடைத்ததை நினைத்து மகிழ்கின்றேன். 

  நாம் அனைவரும் இந்தியத் தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்பதனை  எண்பித்தவர் கலாம் அவர்கள். தன் வாழ்விலே ஒரு கட்டத்துக்குப் பின்  எல்லாம் இருந்தும், எதையும் தன் சொந்த  தேவைக்காக பயன்படுத்தாதவர். இத்தகைய மாமனிதர் வாழ்ந்த தேசத்திலே நான் பிறந்தேன் என்பதை விட, அவர் வாழ்ந்த நாட்களிலே வாழ்கிறேன் என்பதில் என் மனம் பெருமை கொள்கிறது. 

      இஸ்லாம் மதத்திலே ஒரு முறை உண்டு. ஒரு ஆண்மகனுக்கு எவ்வளவு பொருளாதாரம் (சொத்து) உள்ளதோ , அதற்கேற்ப  திருமணங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் கலாம் அவர்கள் ஒரு துறவியாக வாழ்ந்தவர் என்பது நாம் எல்லோரும் அறிந்த மாபெரும் உண்மை. கலாம் ஐயா அவர்களின் கனவுகள் மெய்யானதாய் ஆகிட உறுதி ஏற்ப்போம்.

      கலாம் தாத்தா உங்களுக்கு என் சலாம்