Thursday, 22 October 2015

மரணம் - வரும் நேரம் தெரியாது

"என் இறப்பிற்குப் பின் என்னோடு எனக்கு சம்மந்தமில்லை"
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒவ்வொரு பாதையில் போகின்றோம். ஒவ்வொரு கடவுளை, மதத்தை பின்பற்றுகின்றோம். நாம் வெவ்வேறு வழிகளில் பயணித்தாலும், பயணத்தின் கடைசியில் நாம் அனைவரும் செல்லுகின்ற இடம் ஒன்றுதான், அதுதான் மரணம். இதை யாராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. இந்த நூற்றாண்டின் கவிஞன் கண்ணதாசன் இப்படி கூறுகிறார்.
" வீடுவரை உறவு  வீதி வரை மனைவி
   காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" 

ஒரு மனிதன் இறந்த பின் அவனது இறுதி பயணத்தில் உடன் வருவது யார்? என்ற கேள்விக்கு இந்த பாடல் பதில் அளிக்க முயல்கிறது இவ்வரிகள். 

             சேர்த்துக் குவித்துள்ள செல்வமா? -  அது வீட்டோடு தங்கிவிடும்.
             மனைவியா? - வீதி வரை துணை வருவாள்.
             மகனா? - சுடுகாடு வரை வருவான்.
             கட்டிய கட்டடமா? - அது அசைவதில்லை.
             பெற்ற பட்டங்களா? - நீ இறந்தபின் ஒன்றுக்கும் உதவாது.

பின் யார்தான் கடைசிவரை துணை வருவார்? நீங்கள் செய்த நல்வினை தீவினைகளே என்று கடைசியில் முடிகிறது இப்பாடல் வரிகள்.

"காதற்ற ஊசியும் வாராது, காண் கடை வழிக்கே"  - என்கிறார் ஒரு அறிஞர். இதன் கருத்து என்னவென்றால், மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கடைசியில் பயனில்லாத, காதற்ற ஊசியைப் போல, கையில் எதையும் கொண்டு செல்ல முடியாது. இன்று நீங்கள் சம்பாதித்த சொத்துகளாக நினைப்பவை எல்லாம் உங்களோடு கூட வரப்போவதில்லை. ஆடி அடங்கப் போகும் இந்த வாழ்க்கையில் ஒருவர் வாழ்ந்த வாழ்வின் சிறப்பு அவருடைய மரணத்தின் போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில் ஒருவர் இறந்தபிறகுதான்  மனிதர்கள் அவரைப் பற்றிய மதிப்பீடுகளை  மதிப்பீடு செய்கிறார்கள்.

காலையில் வீட்டைவிட்டு கிளம்புகிற நீங்க, உயிரோடு திரும்பி வந்தால் உங்க பேரை சொல்லி, So and So வந்திருக்கிறாங்க  என்று சொல்வார்கள். இதே காலையில போற நீங்க, லாரியில அடிபட்டு, செத்து கூளமாக வாரிட்டு வந்து, கட்டு கட்டி மார்ச்சுவரி வேன்ல வந்தா, என்ன சொல்வாங்க. மொத்தமா சேர்த்து ஒரே பேருதான் Body வந்துருச்சா? இல்லன்னா Body எப்ப வரும்? ஆமாங்க, நீங்க உயிருக்கு உயிரா நேசிக்கிறவங்க கூட உங்க உடம்புல உயிர் இல்லன்னா, Body- ன்னுதான் சொல்வான்க. இந்த உயிரை காப்பாத்துறதுக்குதான்  நீங்களும் நானும் போராடுகிறோம்.


Body without soul is just an empty shell. Soul is giving you life.

நீங்க எவ்வளவு பெரிய பதவியில இருந்தாலும், எவ்வளவு பெரிய பட்டங்கள் பெற்றிருந்தாலும், எத்தனை உயர்ந்த சாதனையாளர் விருது பெற்றிருந்தாலும், இருக்கிற அத்தனை திறமையும் உங்களிடம் இருந்தாலும், உங்க குடும்பம் எவ்வளவு பெரிய பணக்கார குடும்பமாய் இருந்தாலும் போன உயிர் போனதுதான், அதை திரும்ப கொண்டு வர முடியாது. இதுதாங்க உண்மை. அதை நினைக்கவே நம்ம மனசு தயங்கும். ஏன்னா? உண்மை எப்போதுமே நமக்கு கசக்கும் என்பதால் நாம் அதை சீண்டுவது கூட கிடையாது. செய்யுற எல்லா வேலைக்கும் Time Table போட்டு, Schedule  போடுற நமக்கு, நம்ம மரணத்தோட நேரம் தெரிஞ்சா , கொஞ்சம் எப்படி இருப்போம்னு யோசிச்சு பாருங்க.

எங்கேயாவது சுற்றுலா போனா, ரெண்டு நாள் கழிச்சு, நமது சொந்த ஊருக்கு திரும்பி வர மனம் வராது. அதுக்காக நீங்களும் நானும் அங்கேயே தங்கி விடுறதும் கிடையாது. அதே போலத்தான் மேலிருந்து சுற்றுலாவாக கீழே சுற்றிப் பார்க்க வந்த நாம், மேலே செல்ல வேண்டிய நேரம் வரும்போது, இந்த பூமி எனக்கு ரொம்ப பிடிச்சுடுச்சு, எனக்கு தேவையான எல்லா வசதியும் இங்கே இருக்கு, நான் இங்கேயே இருந்துடறேன் என சொல்ல முடியாது. நீங்களும் நானும் விரும்புறோமோ, விரும்பலையோ, வாழ்ந்தோமோ, வாழலையோ கண்டிப்பாக ஒருநாள் மரணம் வந்தே தீரும். இது திண்ணம். இதை உங்களை படைத்த கடவுளாலே கூட மாற்ற முடியாது. 


நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, எந்த கவலையும் இன்றி நன்றாக வாழ்ந்தேன்,என் ஓட்டத்தை முடித்துக்கொண்டேன், பரிசு பெற வேண்டிய இடத்திற்கு வந்து விட்டேன் என்ற இலட்சியத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது, மேலான இலட்சியத்திற்காக வாழுங்கள். அந்த உயர்ந்த இலட்சியம் உங்களை உன்னதரின் பாதம் சேர்த்திடும். சாவுக்கு பயப்பட வேண்டாம், எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள். கவனமாய் இருங்கள். ஏனெனில் திருடன் எப்போது வருவான் என்று வீட்டுத் தலைவருக்கு தெரிந்திருந்தால் அவர் விழிப்போடு இருப்பார். நாமும் மரணம் எப்போது வரும் என அறியோம்.

நான் நெடுநாள் வாழப்போகிறேன் என பலர் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பர், நிலையற்ற வாழ்வை நினைத்து பார்க்காமல். இன்னும் நிறைய நாள் வாழவேண்டும், சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளையோர் அடுத்த நொடியே இறக்கலாம். இதோ இறக்கப்போகிறார் என நாம் நினைக்கும் முதியவர் இன்னும் பல வருடங்கள் வாழலாம்.எனவே எப்போது மரணம் வந்தாலும்,எதிர்கொள்ள தயாராய் இருக்கும் மனிதர் எப்போதும் விழிப்பாய் இருக்கிறார்.ஏனெனில் எந்த நேரத்தில் எது நடக்கும் என்று தெரிந்து வைத்திருக்க நமக்கு நேரமில்லை. எல்லாம் கடந்து போகும் என்ற மனநிலை நம்மில் இருந்தால் மரணம் கூட ஒரு கடத்தலே.

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும், அதனைக் கொண்டு பெருமிதம் அடைவதிலும் நேரத்தை செலவிடும் நானும் நீங்களும், ஏனோ இவ்வுலக வாழ்வு நிரந்தரமற்ற, தற்காலிக வாழ்வு என்பதை மறந்து இஸ்டத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாவு ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். நேற்று உங்களோடு இருந்தவர்கள் இன்று உங்களோடு மட்டுமல்ல, இந்த உலகிலே இல்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு. அதை தடுக்கவோ, தள்ளிப்போடவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ எந்த மாமனிதனாலும் இயலாது.

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது, ஒரு சோதனை என்பதை உணர்ந்து, அழியக் கூடிய பொருட்களின் மீது, பேராசை கொள்வதை விட்டுவிட்டு, நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக, அதிகம் அதிகம் நற்காரியங்களை செய்வோமாக. நாளை உங்களது மரணம் உங்களை வந்தடைந்து விடலாம். அதற்குள் யார் யாரையெல்லாம்  மன்னிக்க வேண்டுமோ அவர்களை மன்னித்து மகிழ்ச்சியோடு வாழ்கையை வாழ்ந்தால், நாளைய உலகம் உங்களை போற்றும்.




No comments:

Post a Comment