Saturday, 5 September 2015

என் ஆசானே ! உம்மை என் நெஞ்சம் மறப்பதில்லை 

நம்முடைய  வாழ்க்கையில்  எத்தனையோ ஆசிரியர்களிடம்  நாம் பாடம் கற்று கொண்டிருக்கிறோம். ஆனால் ஏனோ நமது மனம் எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. ஆனால் ஒரு சிலரை மட்டும் நாம் மறப்பதில்லை. அப்படி எனது வாழ்விலும், புது விதமான சமூக கண்ணோட்டத்தை விதைத்த என் ஆசானைப் பற்றி பகிர்வதில் பெருமிதமடைகிறேன். பல நல்ல வாழ்க்கை பாடங்களை உங்களுக்கு  இலவசமாய் வழங்கிய உங்கள் ஆசிரியர்களை  முடிந்தவர்கள் தேடிச்சென்று வாழ்த்துவோம். ஏனெனில் ஒரு நல்ல ஆசிரியர் தன்னோட பணியை, வாழ்வாதாரத்திற்கான வேலையாக என்றைக்குமே பார்ப்பதில்லை, மாறாக... அதை  ஒரு

  சேவை ரீதியான பணி 
 உயிரோட்டமான பணி 
ஆய்வு சம்மதப்பட்ட பணி 
உளவியல்  ரீதியான பணி 

என்றுதான் பார்க்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும்சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள். ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாததுஏனெனில்ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானதுஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்லஇந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. ஒரு நல்லாசிரியர் பல நல்ல மாணவர்களை உருவாக்கி நாட்டின் பெருமையை உயர்த்துகிறார். நல்ல ஆசிரியரின் பணிக்கு எல்லையே கிடையாது. தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் முதலாளி ஆவதை ஒருவனும் விரும்பமாட்டான். ஆனால்தன்னிடம் கற்கும் மாணவன் சிறந்த அறிஞனாக ஆவதைக் காணும் ஆசிரியப் பெருமக்கள் பெருமகிழ்ச்சியுறுவர். 

ஒரு விளக்கு இருந்தால் போதும்அதைப் பயன்படுத்தி பல விளக்குகளை ஏற்றலாம். இத்தகைய ஒரு எல்லையில்லா சேவையை நானும் என்  ஆசிரியரிடம் கண்டேன், அதை நினைத்து பார்த்து வியக்கின்றேன். நான் ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு செல்லும்போது என்னோடு கூட படித்த தோழிகளின் இல்லங்களுக்கு சென்று வரும் வழக்கமுண்டு .அப்படிச் செல்லும்போது, எவ்வளவு முயன்றாலும் மீண்டும் கிடைக்காத எங்களின் பள்ளிகால அனுபவங்களை நினைத்து பார்த்து மகிழ்வோம். அவ்வேளைகளில் நாங்கள் எங்கள் ஆசிரியர் ஒருவரை பற்றி பேச என்றும் மறப்பதில்லை. 

ஓர் ஆசிரியர் தன்னிடம் கல்வி பயின்ற மாணவரை மறந்து விடலாம். ஆனால்ஒரு மாணவர் தான் கல்வி பயின்ற ஆசிரியரை என்றும் மறக்க மாட்டார். அதுவே நல்ல மாணவருக்கு அடையாளம். என்னுடைய ஆசானிடம் நான் மேற்கூறிய நல்ல ஆசிரியற்குரிய எல்லா வாழ்வியல் செயல்பாடுகளையும் அதிகமாகவே பார்த்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றை  மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அருகில் மாங்கோட்டை, ஒரு மிகப்பெரிய கிராமம், விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள். அங்கு ஒரு அரசு நடுநிலைப்பள்ளி, எங்கள் ஊரில் பள்ளிக்கூட வசதி இல்லாததால் நான் அங்கு சேர்க்கப்பட்டேன். நான் அங்கு 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்லும் தருணம். அவ்வூரில் 5,6 வகுப்பைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் அங்கு ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு சில வகுப்பினரால் கருதப்பட்ட, சகோதர சகோகதரிகளும் ஊரின் ஒரு மூலையில் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் ஒரே பள்ளியில் படிக்கும் சூழல் இருந்த போதிலும், ஒரு சில குழந்தைகள் அவர்களோடு பேசுவதை தவிர்த்த நிலைமை  காணப்பட்டது.

இருப்பினும் அழுக்குச் சட்டைகளோடும், எண்ணெய் தேய்க்காத பரட்டை தலைகளோடும், கிழிந்த சட்டைகளோடும், மூக்கு ஒழுகும் முகங்களோடும் மாணவ மாணவிகள் ஊரின் எல்லா பகுதிகளிலிருந்தும் பள்ளிக்கு வருவார்கள். அவர்களையும் நாம் குறைபட்டு கொள்ள முடியாது. அங்குள்ள பல குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை அவ்வாறு இருந்தது. பள்ளி நிர்வாகமும் சுத்தத்தை பற்றி சொன்னது, சில வேளைகளில் கண்டித்தது. ஆனால் முழு மாற்றம் எங்கள் வகுப்பில் தொடங்கியது. மாற்றத்திற்கு காரணம் எங்கள் வகுப்பாசிரியர் திரு. செல்வம்  அவர்கள்.


எல்லா வகுப்புகளை போலவே எங்களுக்கும் வகுப்புகள் ஆரம்பமாயின. எல்லா வகுப்புகளையும் விட எங்கள் வகுப்பு மாணவர்கள் ஒரு சில வாரங்களில் எங்கள் வகுப்பு மாறுபட்ட, நல்ல புதிய சிந்தனைகளுக்கு மாற்றப்பட்டோம். இந்த வகுப்பில் என் வாழ்க்கைக்கான அஸ்திவாரம் விதைக்கப்பட்டதை நான் இப்போது உணர்கின்றேன்.

மாற்றம் நிகழும் வரைஎங்கள் வகுப்பிலும் பலர் நான் மேற்கூறியவாறுதான் பள்ளிக்கு வந்தார்கள். எங்கள் ஆசிரியர் திரு.செல்வம் அவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். ஒருநாள் வகுப்பிற்குள் நுழைந்தவுடன் எண்ணெய் தேய்க்காத, ரிப்பன் வைத்து தலை கட்டாத என் தோழிகளை எழுந்து நிற்க சொன்னதும், பயந்துகொண்டே அவர்களும் எழுந்து நின்றார்கள். ஒரு மாணவியை அழைத்து, தனது பையிலிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்தார். ஒரு டப்பாவில் தேங்காய் எண்ணெய், சீப்பு , கண்ணாடி, பவுடர் இருந்தது. எனது தோழிகளை அழைத்து, எண்ணெய் தேய்க்காத, தலை சீவாத என் தோழிகளுக்கு  எண்ணெய் தேய்த்து தலை சீவி விடச் சொன்னார். அதை நினைத்து பார்க்கும்போது இப்போதும் நான் வியக்கின்றேன். ஏனெனில் நானும் ஒருநாள் அந்த வகுப்பில் பவுடர் போட்டுக்கொண்ட  ஞாபகம் இப்போது நினைவுக்கு வருகின்றது. 

தினமும் அவ்வாறு வரும் எனது தோழிகளின், தோழர்களின்  எண்ணிக்கை குறைந்தது, எண்ணெயும், பவுடரும் காலியானது, எங்களின் மனதைப்போல் உடைகளும் சுத்தமானது, எங்கள் நகங்கள் அடிக்கடி சுத்தமாக இருந்தன. எங்கள் எழுதுகோல்கள் மையினை கொட்டவில்லை, நாங்கள் ஒவ்வொருவரும் தோழமை உணர்வோடு பழக ஆரம்பித்தோம். எந்த பேதமும் பார்க்காத எங்கள் ஆசான் எங்களுக்கு புத்தக அறிவோடு, பொது அறிவையும், சமுதாயத்தை பற்றிய அறிவையும் வழங்கினார். மீண்டும் புதிய திட்டமாகதின்பண்டங்களில் வீணடிக்கும் சிறு தொகையை சேர்க்க சிறுசேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

ஏற்றத்தாழ்வுகளால் நிறைந்திருந்த எங்கள் பெற்றோர்களின் மனமும் எங்கள் ஆசிரியரை விரும்ப ஆரம்பித்தது. தொடக்கத்தில் நாங்கள் கண்டிப்பு மிக்கவர் என நினைத்த எங்கள் ஆசிரியர் எங்களுக்கு மட்டுமல்ல எல்லா மாணவர்களுக்கும் தோழரானார். போட்டிகள் பல நடத்தினார். வெற்றி பெற்றோருக்கு மட்டுமல்ல பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கினார். இத்தனை செயல்களையும் அவர் செய்தபோது அவருடைய வயது 25 முதல் 30 க்குள் இருந்திருக்கும்.

15 வருடங்களுக்கு பிறகுகடந்த மே மாதம் என் ஆசான் ஐயா செல்வம் அவர்களை அவருடைய குடும்பத்தினரோடு சந்திக்கும் மாபெரும் வாய்ப்பை பெற்றதை நினைத்து மகிழ்கின்றேன். இன்னும் எனது வகுப்பு தோழிகள் பலர் அவரோடு தொடர்பில் இருக்கின்றோம். நாங்கள் இன்று பல நல்ல நிலைகளில் இருப்பதற்கு எங்கள் ஐயா திரு. செல்வம் அவர்கள் மிக முக்கிய காரணம். 

எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! 
உங்கள் சேவைக்கு 
நீங்கள் தந்த கல்விக்கு 
நன்றி சொல்வது மட்டும் போதாது 
நான் என் ஆயுள் முழுவதும் 
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன் 
 உங்கள் சேவையை என்றும் 
மறக்க மாட்டேன் ! 
நன்றியுடன் உங்களை 
நினைத்துப் பார்க்கும் 

உங்கள்  சேவை இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்தும்
உங்கள் அன்பு மாணவி